Monday, July 28, 2014

குற்றாலத்தின் பெருமை சொல்லும் அருங்காட்சியகம்

குற்றாலம் நகரில் அருவிகள்தான் பிரதானம் என்றாலும் அங்குள்ள அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. குற்றாலம் பண்பாட்டையும், இந்து மத வழிப்பாட்டையும் தன்னகத்தே தக்க வைத்து கொண்ட சிறப்பு வாய்ந்த பழமையான நகரமாகும்.


குற்றாலத்தின் பழமை:
************************
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், பழைய குற்றால அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. இந்த ஆற்றங்கரையில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலத்திலும், அதனை அடுத்து ஆயிரப்பேரி என்ற கிராமத்திலும் பெருங்கற்கால பண்பாட்டு தடையமாகிய முதுமக்கள் தாழிகளும், கருப்பு, சிவப்பு கலயங்கலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மனிதர்கள் குற்றாலம் பகுதியில் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.

திருக்குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் பாண்டியர், சோழர், நாயக்கர், தென்காசிப் பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் இவ்வூரில் தொடர்ச்சியான வரலாற்றை உறுதி செய்கின்றன.


இந்த அருங்காட்சியகம் பழைய திருவாங்கூர் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருவது தனிச்சிறப்பாகும். இங்கு சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்டைய கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 9 காட்சி பெட்டிகளில் இவ்வூர் வரலாற்றோடு தொடர்புடைய தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.பி.8ம் நுற்றாண்டில் வணங்கப்பட்ட திருமால் சிலை, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிராம்மி சிலை,இப்படி ஏராளமான அரிய பொக்கிஷங்கள் இங்குள்ளன.


பழங்கால ஓலைச்சுவடிகள்:
*****************************
அகஸ்தியர் மருத்துவ பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகள்,கி.பி.16ம் நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளும் இப்பகுதியில் நடந்தற்க்கான சான்றுகள்,என கி.மு, கி.பி, காலத்து ஓலைசுவடிகள், கல்வெட்டுக்கள், மரச்சிற்பங்கள், நிரம்பப்பெற்றுள்ளன.

 
பழங்குடியினர் பொருட்கள்:
*****************************
கொண்டை ஊசிகள், மரத்தாலான உரல், பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், தேன் சேகரிக்கும் மூங்கில் குழல், பீரங்கி குண்டுகள், கி.பி.முதல் நூற்றாண்டு அனுமன், மதுரைவீரன் சிலை, பூஜை பொருட்கள், கி.பி.18ம் நூற்றாண்டு சீனப்பெண் தெய்வம், கி.பி.10ஆம் நூற்றாண்டு கால்சிலம்பு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Thursday, July 24, 2014

தந்தை ராஜராஜனை மிஞ்சிய மகன் ராஜேந்திர சோழ பெரு வேந்தர்

தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன், சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன்.


சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார்.

தலைநகரை மாற்றியது ஏன்?
***************************
தஞ்சையைத் தலைநகராக் கொண்டு சோழ ராஜ்ஜியம் தழைத்தோங்கியிருந்த நிலையில் வடக்கிலிருந்து அதாவது தற்போதைய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி படையெடுப்புகள் நடந்தன. இதனால் தமிழகத்தின் மத்தியப் பகுதியில் தலைநகரை மாற்ற முடிவு செய்தே கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை ஏற்படுத்தினார் ராஜேந்திர சோழன்.

கங்கையை வென்ற சோழன்:
**************************
இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாகவும் விளங்கியது.

மிகப் பெரிய தலைநகரம்:
***********************
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் அமைத்த தலைநகரம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. எதிரிகள் அத்தனை சீக்கிரம் ஊடுறுவி விடாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச் சுவரைக் கட்டினார் ராஜேந்திரன். அருகிலேயே கொள்ளிடம் ஆறும் இருந்ததால் வளமைக்கும் குறைவில்லாமல் சொர்க்க பூமியாக திகழ்ந்ததாம் கங்கை கொண்ட சோழபுரம்.

மிகப்பெரிய சிவ ஆலயம்:
***********************
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.

கோவிலின் கட்டுமானப்பணி:
*************************
4 ஏக்கர் பரப்பளவில் 160 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் கலை நயத்துடன் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலின் கட்டுமானம் தற்கால பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் தஞ்சைப் பெரிய கோவிலை விட இந்த கோவிலின் கட்டுமான நுனுக்கம்தான் மிகச் சிறப்பானது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடாரம் கொண்டான் ராஜேந்திரசோழன்:
***********************************
தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது. பிரம்மாண்ட கோட்டை இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்தார்.

ஏரி வெட்டிய சோழன்:
********************
அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.

பாண்டியனை விரட்டி விரட்டி வென்ற ராஜேந்திரன் அதேபோல பாண்டிய மன்னர்கள், சோழர்களின் பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். இதனால் தங்களது மணிமகுடத்தை சோழர்கள் கைப்பற்றி விடாமல் தவிர்ப்பதற்காக இலங்கைக்குக் கொண்டு போய் பத்திரப்படுத்தினர். இதை பறித்து வர ராஜராஜ சோழன் முயன்றும் முடியவில்லை. ஆனால் ராஜேந்திர சோழன் மிகவும் சாணக்கியமாக செயல்பட்டு மணிமகுடத்தை பறித்துக் கொண்டு வந்தார். கூடவே சிங்கள மன்னர்களையும் போர் புரிந்து வென்றார்.

ராஜராஜனை விட வீரம் மிக்கவர் தந்தை ராஜராஜ சோழனை விட வீரம் மிக்கவர், மதியூகி என்று பாராட்டப்படுகிறார் ராஜேந்திர சோழன். தோல்வியே அறியாதவர் இவர். தோல்வியைச் சந்திக்காத, அதிக வெற்றிகளைக் குவித்த ஒரே இந்திய மன்னர் என்றும் போற்றப்படுகிறார்.

தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர் சாதாரண தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை கோவில் வாசலில் சந்தித்து அவரைப் பிடித்துப் போய் மணந்து அவருக்குரிய மரியாதைகளை, வசதிகளைச் செய்து கொடுத்தவரும் கூட. அவரது பெயர் பாவை. இந்த பாவையின் சிலை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இப்போதும் கூட உள்ளது.

Wednesday, July 16, 2014

கங்கை கொண்ட சோழ ராஜா ராஜேந்திரபுரம்

மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும், ஐம்பது வீடுகளும் கொண்ட "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற சிறிய கிராமத்தின் பெயர் பலகை நம் கண்ணில் தென்படும்.சோழர்கள் ஆட்சியில் அதிக வருடங்கள் தலைநகராக இருந்த ஊர் அது. அந்த ஊரை தலைநகராய் கொண்டு சுமார் 254 வருடங்கள் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், பல தேசங்களை தனக்கு கீழாக கொண்ட தலைநகர் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை அரண்மனைகள்? எத்தனை தெருக்கள்? எத்தனை அங்காடிகள்? எத்தனை படை வீரர்கள்? எத்தனை யானைகள்? எத்தனை குதிரைகள்? கண்களை மூடிக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் அந்த சோழத் தலைநகரின் நிலையை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், பிரம்மிப்பு!. அகழ்வாய்வு செய்யும் போது அங்கு கிடைத்த கல்வெட்டைக் குறித்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த நகரில் ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், சோழ கேரளாந்தகன் திருவாயில், ராஜ ராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, கூடைஆழ்வன்யன் போன பெருவழி, வேம்புக்குடி வாசல், குலோத்துங்க சோழன் திருமதில், குலோத்துங்க சோழன் பெருவழி போன்ற எண்ணற்ற பெயர்களை தாங்கிய வீதிகளும், வாயில்களும், அரண்மனைகளும் நிறைந்த அற்புதமான தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது இந்த கிராமம்!.

ஒரு சிறிய விஷயத்தை மனதில் நிலை நிறுத்துக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள், நடனமும், நாட்டியமும், இசையும், கணிதமும், மருத்துவமும், விவசாயமும், வணிகமும் உச்சத்தை தொட்டிருந்த நேரம் அது, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அதே சோழர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் இது, ஒரு கோயிலையே இத்தனை பிரம்மாண்டமாய் அமைத்தவர்கள், தாங்கள் புதியதாக குடியேரப்போகும் நகரை எப்படி வடிவமைத்திருப்பார்கள், நகரின் நடுவே கோயில் இருக்க வேண்டும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த பிரம்மாண்ட விமானம் தெரிய வேண்டும், யாருக்கு வீடு எங்கே ஒதுக்க வேண்டும்? தெருக்கள் எப்படி அமைய வேண்டும், போர் வீர்கள் எங்கே இருக்க வேண்டும்? அரண்மனை எந்த திசையில் இருக்க வேண்டும்? திடீரென படை எடுப்பு வந்தால் அதை சமாளிக்க படைகளை அந்த நகரில் எப்படி நிலைநிறுத்தி இருக்க வேண்டும்,யோசிக்க, யோசிக்க ஆவல் அதிகமாகின்றது.

நேஷனல் ஜியோகிராபிக் சானலில் "Mega Cities" நிகழ்ச்சியை காணும் போது ஏற்படும் அதே பிரம்மிப்பு!. அப்படி அமைக்கப்பட்ட அவர்களின் நகரில் திசைக்கு ஒன்றாக நகரின் எல்லையில் காவல் தெய்வங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அந்த தெய்வங்கள் அனைத்தும் சோழர்கள் கங்கை வரை போருக்கு சென்ற போது வழியில் கடந்து சென்ற ஊர்களில் இருந்து எல்லாம் கொண்டுவரப்பட்ட தெய்வங்கள் அனைத்தையும் ஒவ்வொரு திசையிலும் பிரத்திட்டை செய்திருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் சென்று இந்த தெய்வங்களை காணுங்கள், இவை அனைத்தும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெற்றிச் சின்னங்களாக சோழர்களால் அன்றைக்கு கொண்டுவரப்பட்டவை.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கே "சளுப்பை" என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊரில் (அன்று சாளுக்கிய குலநாசினி மண்டலம்) வட எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கே வானதாராயண் குப்பத்தில்; வீர ரெட்டித் தெருவில், தென் திசை எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே செங்கல் மேடு என்ற இடத்தில் கிழக்கு திசை எல்லை தெய்வமாக கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

பாலகுமாரன் அய்யாவோடு, திரு.கோமகன் தயவில் நான் அந்த சோழத் தலை நகரை வீதி வீதியாக சுற்றி வந்து வியந்திருக்கிறேன், இந்த வெற்றிச் சின்னங்களை தொட்டுத் தடவி பரவசமடைந்திருக்கிறேன், ஆங்காங்கே காணப்படும் இடிந்த சுவர்களும், அரண்மனை மண் மேடுகளும், இந்த வெற்றிச் சிலைகளையும் காணும் போது, அந்த அற்புதமான நாகரிகத்தின் அழிவைக் கண்டு கலங்காமல் இருக்க முடியவில்லை, இன்றைக்கு புற்கள் நிறைந்திருக்கும் அந்த கிராமம், அன்று புலிகள் நிறைந்த பெரிய நகரம்! அந்த நகருக்கு சொந்தக்காரன் ராஜேந்திரன்! அவன் தான் அந்த புலிகளுக்குத் தலைவன்!.

வாழ்க தமிழ்பெருங்குடி மக்கள்! வளர்க "கங்கை கொண்டார்" இராசேந்திர பெருவேந்தர் புகழ்!!

Wednesday, July 9, 2014

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும்.தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும்.

இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன்.

நூல்: தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்

ஆக்கியோன்: சே.நாகலிங்கம்
வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா

தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசர்கள் , தொண்டைமான் என்னும் பட்டதோடு ஆட்சி புரிந்ததை நாம் காண்கிறோம் .

இவர்களில் யாழ்பாணத்திற்கு வந்த தொண்டைமான் யார் என்பதே நமது கேள்வி ?

இதை பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த இலங்கை வரலாற்று வல்லுனரும் , ஆராய்ச்சியாளருமான "முதலியார் இராசநாயகம் " அவர்கள் ,

இங்கே  வந்த தொண்டைமான் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழ சக்கரவர்த்தியாக இருந்த முதலாம் குலோத்துங்க சோழனின் பிரதம படை தலைவனாக இருந்த "கருணாகர தொண்டைமான்தான்" என்று கூறுகிறார் .

குலோத்துங்கனின்  கலிங்க வெற்றியை கொண்டாடும் விதமாக , குலோத்துங்கன் அவைபுலவராய் இருந்த  ஜெயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துபரணி என்னும் நூலை இயற்றி அதை அரசபையில் அரங்கேற்றினார் .

இந்த நூலில் ஜெயங்கொண்டார் அவர்கள் குலோத்துங்கனை புகழ்ந்து வாழ்த்து பாடிய பின் சோழ படைக்கு தலைமை தாங்கி , அந்த படையை கலிங்க தேசத்துக்கு நடத்தி சென்று கலிங்க போரில் வென்று கலிங்க தேசத்தை மீண்டும் சோழ பேரரசின் கீழ் ஒரு பகுதியாகிய கருணாகர தொண்டைமான் அவர்களை பின்வருமாறு புகழ்கிறார் .

தொண்டையார்வேந்தனைப் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே
வண்டை வளம்பதி பாடீரே
மறைமொழிந்த பதி மரலில் வந்தகுல
திலகன் வண்டைநகர் ராசன்

இந்த  புகழ் மாலைகளிளிருந்து தொண்டைமானின் முன்னோர் தொண்டைமண்டல அரசர்களாய் இருந்தார்கள் என்றும் , அவன் பல்லவ பேரரசர்களின் வழித்தோன்றல் என்றும் சோழநாட்டில் கன்னடனாட்டின் எல்லைக்கு அண்மையில் இருக்கும்வண்டலூர் என்ற நகரை தலைநகராக கொண்டு அந்த பிரதேசத்தை ஆண்டு வந்த சிற்றரசன் என்பதும் தெரிய  வருகிறது .

இவனுடைய முழுப்பெயர் "பல்லவராய திருவரங்க கருணாகர  தொண்டைமான்" .திருவரங்க என்ற பெயரில் இருந்தும் , தமிழ்நாட்டில் காணப்படும்  தொண்டைமான்களின் ஒரு சமஸ்கிருத கல்வெட்டில் இருந்தும் இவன் விஷ்ணு சமயத்தவன் என்பது உறுதியாகிறது .

###################

குறிப்பு :
கருணாகர  தொண்டைமானை பற்றி பாடிய கம்பர் அவர்கள் ,"சிலைஎழுபது " என்னும்  நூலில் ,கருணாகர தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடியுள்ளார் .

இதில்  கருணாகர தொண்டைமானை பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் , வன்னியர்,  சம்பு குலத்தவன், வன்னியர் எடுத்த வில்லே வில் என்றும், வீரக்கழல்  தரித்தவன் என்றும் வர்ணிக்கிறார் .

அதே போல குலோத்துங்கன் மகன் விக்கிரம சோழனை

"அக்கினி குலத்து விக்ரமன் எடுத்த வில்லே "

என்றும் புகழாரம் சூட்டுகிறார் .

"குலத்தலைவர் படை சிறப்பு " என்னும் தலைப்பில் கம்பர்கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

குலத்தலைவர் படைச் சிறப்பு
============================

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே.


சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல்இவ்வாறு குறிப்பிடுகின்றது.
இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.

பிறகு "பரிசுதரற் சிறப்பு" என்னும் தலைப்பில் கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

பரிசுதரற் சிறப்பு
===============

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே.

##############################################################################

இவன் யாழ்பாணத்திற்கு ஏன் வந்தான் என்பதை இப்போது ஆராய்வோம் .

முதலாம்  குலோத்துங்கன் அரசு செய்த காலத்தில் முதலாம விசயபாகு என்பவன் இலங்கை அரசனாய் இருந்தான். அரசியல் காரணங்களுக்காக இவர்களுக்கு இடையில் பகை தோன்றியது. இந்தப் பகையின் காரணமாக விசயபாகு தன்னுடன் தனி யுத்தத்திற்கோ படைகளைக் கொண்டு செய்யும் யுத்தத்திற்கோ வரும்படி குலோத்துங்கனுக்குச் சவால் விடுத்தான், என்று சிங்கள வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

இந்தச்  சவாலை ஏற்ற குலோத்துங்கன் தனது பிரதம படைத் தலைவனாகிய தொண்டைமானை ஒரு படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினான். இதுவே தொண்டைமான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததற்கு உண்மைக் காரணம். இது தவிர, தொண்டைமான் இங்கே வந்து யாழ்ப்பாண அரசனை போரில் வென்று யாழ்ப்பாணத்தைச் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான்.  அதன் பின் இந்நாட்டை அரசு செய்வதற்கான ஒழங்குகளைச் செய்து இந்த நாட்டின் பாதுகாப்புக்காக, இப்போது தொண்டைமானாறு என்று விளங்கும் இடத்தில் ஒரு படைத் தளத்தையும் அமைத்து இந்தப் படைகளின் தலைவர்களாகத் தன்னுடைய உறவினர்களான கங்க, பல்லவராச வம்சங்களைச் சேர்ந்தவர்களையே நியமித்து அவர்களைத் தொண்டைமானாற்றில் குடியேற்றி வைத்தான்.

தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் இங்கே விளையும் உப்பு தன்னுடைய நாட்டுக்குத் தேவையாக இருந்தபடியால் அதைச் சேகரித்து மரக்கலங்கள் மூலமாக அங்கே கொண்டு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். தொண்டைமான் காலத்திலும் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலும் தொண்டைமானாறு ஒரு படைத்தளமாய் இருந்தது என்பதற்கு வாழும் குடும்பங்களில் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாட்டுக்களில் இருந்தும், இங்கே உள்ள காணிப் பெயர்களில் இருந்தும் நாம் காணக் கூடியதாய் உள்ளது.

சில குடும்பங்களிலிருக்கும் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடலில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன.

“கைக்கோ கனக வள்ளி
காலுக்கோ வீரதண்டை
தண்டையுமோ பொன்னாலே
தாழ்வடமோ முத்தாலே “

என்றும் இறுதியில் பின்வருமாறு பாடுவார்கள்.

“என் பட்டதுரையே
படைமுகத்தின் இராசாவே
நீ போருக்குச் சென்றிடுவாய்
பொழுதோடே வென்றிடுவாய்
வென்ற களரியிலே
வீரபட்டம் கூட்டிடுவாய் “

போர்க்களத்துக்குச் செல்லும்போது வீரக்கழல் அணிந்து செல்வது சத்திரியர்களின் வழக்கம். இந்த  வழக்கம் தொண்டைமானாற்றில் இருந்து நெடுங்காலத்திற்கு முன்வே மறைந்துவிட்டது . ஆனால் தொண்டைமானாற்றின் அயலூராகிய வல்வெட்டி துறையில் இன்றைக்கும் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்திருந்தது .

தொண்டைமானாற்றிலுள்ள காநிகளிர் சில பின் வரும் பெயர்களை கொண்டிருன்கின்றன

1. அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை
2. நாயினிச்சியார் கொல்லை
3. சேதுபதியர் கண்டு
4. பணிக்க வளவு

யாழ்ப்பான கச்சேரியில் இருக்கும் தொண்டைமானாற்றில் தோம்பு ஏடுகளில் இக்காணி பெயர் களையும் ஆண்களில் பெயர்களையும் தொண்டைமானற்றை பற்றி பல வரலாற்று விபரங்களை பெற்று கொள்ளலாம்.  அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை என்பது யானை படைத்தலைவன் வாழ்ந்த இடம் .

நாயினிச்சியார் கொள்ளை:
நாயன் என்பது வன்னியர் படைத்தலைவனின் பட்ட பெயர் . நாயினிச்சியார் கொள்ளை என்றால்  வன்னியர் படைத்தலைவன் ஒருவனின் மனைவி வாழ்த்த இடம்.

சேதுபதியர் கண்டு:
 கண்டு என்பது சேதுபதிக் கண்டர் வாழ்ந்த இடம் கண்டர் என்பதும் வன்னிய படை தலைவர்களின் பட்டப் பெயர்களில் ஓன்று இராக்கா வளவு இந்த வளவில் இராக்கா என்னும் பெயருடைய படைத்தலைவர்கள் தலைமுறையாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இராக்காபனை என்று சொல்ல படும் இந்த வளவு தொண்டை மாணற்று பாலத்தின் கிழக்கு  தலைப்பிலிருந்து ஏறக்குறைய 75 யார் தூரத்தில் செல்வச் சந்திதிக்குப் போகும் பாதையில கிழக்குப்பக்கமாக அமைந்திருக்கின்றது, இந்த இடத்தில் தான் ஆற்றின் மேற்க்குக்கரையில் ஆற்றை கடக்கும் இடம் அமைந்திருந்தது ஆற்றைக் கடந்த அரசக்கோட்டமாக இருந்த வடமராட்சிக்கு செலலும் யாவருக்கும் இராக்கா குடும்பத்தை சேர்ந்த ஒரு உத்தியோகிஸ்தரால் பரிசோதிக்கப்ட்ட பின்னரே மேலும்
செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இராக்க என்ற பெயரைக் கொண்ட பலர் இலங்கை அரசர்களாக இருந்த விக்கிரமவாகு, முதலாம பராக்கிரமபாகு ஆகியோரின் கீழ் படைத்தலைமை பன்டிரந்தனர் எனவும் படைகளில் அவர்கள் வகித்த பதவிகளையும் மகாவம்சம் விபரமாக கூறுகின்றது.  பணிக்க வளவு இது பணிக்கர் எனப்பட்ட ஒரு குடும்பத்தினர் வாழ்ந்த இடம் இந்த வளவு தொண்டை மானற்றில் பிரபல்யம் பெற்ற இடங்களில் ஒன்று பணிக்கக் கிணறு என மக்காளால் சொல்லப்படும்  கிணறு ஒன்று இருக்கிறது .
இந்தக்கிணறும் தொணடைமனாற்றிலுள்ள கிணறுகளில் மிகவும் பிரசித்த பெற்ற மூன்று நான்கு கிணறுகளில் ஒன்றாகும். பணிக்கரென்ன பெயரின் பொருள் பேராசிரியர் என்பதேயாகும். அந்தப்பெயர் வாள் வித்தையிலா திறமை பெற்ற பேராசிரியரையே அதிகம் குறிக்கும்.

எத்தனையோ  படைத் தலைவர்கள் வாழ்ந்த தொண்டைமானற்றில் அவர்களுக்கு வாள்வி்தை கற்பிப்பதற்காக அந்த வித்தையில் திறமை பெற்ற பேராசிரியர்களை கொண்ட ஒரு குடும்பம் இங்கிருந்தது. ஆச்சரியப் படத்தக்கது ஒன்றல்ல.

இங்கே  நாம் சிங்கள வரலாற்றில் உள்ள ஒரு சம்பவத்தை கவணிப்போம், மலை நாட்டிலிருந்து வந்த வாள் வித்தையில திறமை பெற்ற பணிக்கன் என்ற ஒருவன் சிங்கள அரசனாகிய பராக்கிரமபாகுவிடம் சென்று தான் பெற்றிருந்த திறமையை காட்டினான் என்றும் அதைக்கண்ட அரசன் தன் குடும்பத்தில் இருந்த ஒரு அரசகுமாரியை அந்த பணிக்கனுக்கு விவாகம் செய்து கொடுத்தானென்றும் மகாவம்சம் கூறுகின்றது.

இந்த பணிக்கனுக்கும் சிங்கள ராஜகுமாரிக்கும் பிறந்த மகனை சிங்களத்தில் "சப்புமால் குமாறாய" என்றும் தமழில் "செண்பகப் பெருமாள்" என்றும் அழைக்கப்பட்டான். அவன் இளைஞனாக இருந்தபோதே யாழ்பானம் மீது படையெடுத்து வந்து அப்போ நாட்டின் அரசனாய் இருந்த கணகசூரிய சிங்கை ஆரியனை வென்று சிலகாலம் யாழ்ப்பானத்தை அரச செய்திருந்தான்.

பின்னர்  இவன் யாழ்ப்பான அரசின் தலைநகராய் இருந்த சிங்கபுரம் என்ற நகரை அழித்து நல்லூரை புதிய தலைநகராக்கி அங்கே கந்தசாமி கோவிலையும் கட்டுவித்தான். பின்னர் புவனேகவாகு என்ற பெயருடன் இலங்கையரசனானான் மலைநாட்டிலிருந்து வந்தவனைன்று சொல்லப்பட்ட இவனது தந்தையாகாய பணிக்கன் தொண்டைமானாற்றில் இருந்து தான் சிங்கள நாட்டுக்குச் சென்றான் என்று எண்ணக்கூடியதாய் இருக்கின்றது 
நன்றி :
=====
நூல் :தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்
ஆக்கியோன் : சே.நாகலிங்கம்

வெளியீடு :
வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா