Skip to main content

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!


இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார்.
அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது.
ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார்.
இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான்.
பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.

பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது.
மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை. 
(இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும் உண்டு)
எதிர்ச் சுவற்றில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. இப்படியாக உருப்பெற்றுள்ளது இந்த ஓவியம்.
சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.
பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.
இவ்வோவியத்தின் சிறப்பு குறித்து ஆய்வாளர்கள் பலரும் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
பனைமலை ஓவியத்தின் மாதிரி பிரதி ஒன்று, சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
இவ்வருங்காட்சியகத்தில் ஓவியர் இரவி வர்மா உள்ளிட்டோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மகிழ்ச்சிதான். ஆனால், பனைமலை ஓவியப் பிரதி எங்கே?



அண்மையில் இரண்டுமுறை சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்ற நான், பனைமலை ஓவியப் பிரதி குறித்து கேட்டபோது, அங்கிருந்தவர்கள் உதட்டைப் பிதுக்கியதுதான் பதிலாக வந்தது. அது எங்கிருக்கிறதோ யாருக்குத் தெரியும்?
பாரீசு நகரத்து லூவர் அருங்காட்சியகத்துச் சென்றிருந்த விமர்சகர் ஓவியர் கவிஞர் இந்திரன் அவர்கள், அங்கிருந்த மோனோலிசா ஓவியம், குண்டு துளைக்காத கண்ணாடிகளின் பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்த்து வியந்தார்.
இதற்கும் பல நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் தீட்டப்பட்ட ஓவியங்களையும் செதுக்கப்பட்டச் சிற்பங்களையும் எத்தகைய பாதுகாப்பற்ற நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்றெண்ணி வேதனைப்பட்டாராம்.
கலையுலகில் மோனோலிசா மிகவும் புகழப்படுகிறாள். உச்சி முகர்ந்துப் பாராட்டப் படுகிறாள். இருக்கட்டும்.
மோனாலிசாவை விட பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவள், ஆனால் இன்றும் இளமையாய் இருப்பவள், அழகானவள் எங்கள் உமையம்மை.
இப்படி நாங்கள் இறுமாந்துச் சொல்லலாம். இதில் உண்மையும் நியாயமும்கூட இருக்கிறது.
ஆனால் பாதுகாப்பும் இல்லை. பராமரிப்பும் இல்லை. அந்த வடக்குச் சிற்றாலயத் துக்குப் பூட்டுக்கூட கிடையாது. தமிழ்நாட்டில் வாயில் களைப் போல் திறந்தே கிடக்கிறது. இதன் அருமை குறித்துச் சொல்வ தற்கும் அங்கு ஆள் கிடையாது.
ஒருவேளை பிரெஞ்சுக்காரர்கள் செஞ்சியில் இருந்ததைப் பெயர்த் தெடுத்துச் சென்றதைப் போல, பனைமலை ஓவியத்தையும் எடுத்துச் சென்று பாரீசு அருங்காட்சியகத்தில் வைத்திருந்தால்,
மோனோலிசாவை விட உமையம்மைக்குப் பல அடுக்குப் பாதுகாப்புத் தரப்பட்டிருக்கும்- தமிழனின் ஓவியக் கலையும் உலகளாவியப் பெருமையும் அடைந்திருக்குமோ?

Comments

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்...