Wednesday, December 19, 2012

சாதி கெட்டதா? நல்லதா?

"மதம்" சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக்கு எதிரான "சாதி"
 ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம்.

மனித இனம், இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தது: மதம் என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு… சாதி என்ற அடையாளத்தின் கீழ் வாழ ஆரம்பித்த பிரிவு என வாழ ஆரம்பித்தது. அதில் சாதி மிகவும் இழிவானது என்று மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ ஆரம்பித்த மேற்குலகம் உரத்த குரலில் சொல்லி, அதை சாதிய அமைப்பில் வாழும் நம்மவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். இடை, கடை சாதியினர் மிகவும் வேதனை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் அவர்களுடைய அனைத்து வேதனைகளுக்கும் மேல் சாதியினர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன?
சாதிய வாழ்க்கை முறை அந்த அளவுக்கு இழிவானதுதானா என்பதை முதலில் பார்ப்போம்.

சாதி அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில் இந்தியா அனைத்துக் கலைகளிலும் சிறந்ததாக இருந்திருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. தத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளில் உலகுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. தேவையான தளங்களில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அருமையாக இருந்திருக்கின்றன. மையம் அழிக்கப்பட்டு, அதிகாரப் பரவலாக்கம் மிகுந்த ஆட்சி அமைப்பாக இருந்திருக்கிறது. விவசாயம் போன்ற அடிப்படைத் தொழில்களில் முன்னேறிய நிலையில் இருந்திருக்கிறது. பிற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக இருந்திருக்கிறது. ஏற்றுமதியிலும் மிகுதியாக ஈடுபட்டிருக்கிறது. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் வெவ்வேறு உறுப்புகள் வெவ்வேறு பணிகளைச் செய்வதுபோல், சமூகத்தின் பல்வேறு குழுக்கள் மிகுந்த ஒத்திசைவுடன் பணிபுரிந்து வந்திருக்கின்றன.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் வரை உலகிலேயே அனைத்துத் துறைகளிலும் இந்தியா உச்சத்தில் இருந்திருக்கிறது. இது பிரிட்டிஷாரின் ஆவணங்களிலிருந்தே ஊர்ஜிதமாகியிருக்கும் நிலையில் சாதி அமைப்பு ஒரு சாபக்கேடாக இருந்திருக்க முடியுமா?
சாதிக்கும் மதத்துக்கும் இடையில் இருக்கும் பொதுவான அம்சங்களையும் வித்தியாசங்களையும் முதலில் பார்ப்போம். அதற்கு முன்பாக இன்னொரு விஷயம்.

தொழில் புரட்சி ஏற்பட்டு, பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி, கடந்த கால இந்திய சாதி வாழ்க்கை மிகவும் இழிவானது என்று அவர்கள் பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த பிறகு நடந்த சம்பவங்களை நாம் வேறு வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டும். அதுவரையில் மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் அதே ஏற்றத் தாழ்வுகள்தான் இருந்து வந்திருக்கின்றன. என்றாலும் சாதிய வாழ்க்கை மட்டுமே இழிவானது என்று சொல்லி அவர்கள் செய்த திரிபுகளை அடியொற்றி நம்மவர்கள் நடந்த பாதையில் காணப்படும் சீர்கேடுகளுக்கு நம் முன்னோர்களின் அமைப்பு எந்தவகையிலும் காரணமல்ல.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல் சாதி எதிர்ப்பு இயக்கமானது சாதிய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சிக்கலாகி பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருந்துவருகிறது. இந்தக் காலகட்டத்தை அதற்கான அளவுகோலுடன்தான் பார்க்கவேண்டும். அதற்கு, தொழில் புரட்சிக்கு முந்திய உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால்தான், பிந்தைய பிரச்னைகளுக்கான காரணமும் அதை எப்படிக் களைய வேண்டுமென்ற தீர்வும் புரியவரும்.

மனித இனம் கண்டடைந்த சமூக அமைப்புகளான சாதி, மதம் இரண்டுமே அடிப்படையில் குழு மனப்பான்மை கொண்டவைதான். ஆனால், மதம் பல்வேறு சாதிகளின் தனி அடையாளங்களை அழித்து, பொது அடையாளத்தின் கீழ் வலுக்கட்டாயமாக அணி திரட்டி உருவான சமூக அமைப்பு. இந்திய சாதி அமைப்பு என்பது பல்வேறு சாதிகள் (பழங்குடி இனங்கள்) தங்கள் அடையாளத்தைக் கைவிடாமல், ஒரு தொகுப்பாகக் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு.

சாதி அமைப்பின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையாக எடுத்துப் பார்ப்போம். சாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. அதை மாற்றிக் கொள்ளவோ விலகிச் செல்லவோ எந்த வழியும் கிடையாது.
மதமும் பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவருக்கு வந்து சேர்கிறது. என்றாலும் விருப்பத்தின்படி மதத்தை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு. இது ஒரு கோட்பாட்டு அளவிலான சுதந்தரம்தானே தவிர ஒரு மதத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை நடைமுறையில் எப்போதும் மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது.
அதோடு ஒரு மதத்துக்குள் புதிதாக ஒருவரைச் சேர்த்துக் கொள்ளும்போது, அவருடைய முன்னோர்கள் காலகாலமாகக் கைமாற்றித் தந்த அனைத்தையும் அவர் தூக்கி எறிந்தால்தான் அந்த மதம் அவரைச் சேர்த்துக் கொள்ளும். அந்தவகையில் எல்லாரையும் அணைத்துக் கொள்வது ஒரு போலியான பாவனையாக மட்டுமே மதங்களில் இருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டால்தானே எனக்கு சம மரியாதை தருவதாக ஆகும். நான் உன்னைப் போல் மாறிய பிறகுதான் என்னை நீ சமமாக நடத்துவாய் என்றால் உனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவதற்காகக் காட்டும் சொற்ப சலுகைதான் நீ தரும் சகோதரத்துவமும் சமத்துவமும். அதுவும் முழுமையானது அல்ல என்ற நிலையில் ஒருவருக்கு அதன் மூலம் கிடைக்கும் நன்மையைவிட இழப்பே அதிகம்.

சாதியில் மேல் கீழ் படி நிலைகள் இறுக்கமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கலப்பு என்பது சாத்தியமே இல்லை.
மதத்துக்குள்ளும் படிநிலைகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டவையே. மேற்கத்திய ராஜா தன் மகளை மரம் வெட்டுபவருக்குத் திருமணம் செய்து கொடுத்ததாகவோ மேற்கத்திய புரோகிதர் தன் மகனுக்கு விவசாயி மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகவோ அங்கும் சரித்திரம் இல்லை. உலகில் மதம் சார்ந்த வாழ்க்கை முறை இருந்த இடத்திலும் மேல் கீழ் நகர்வுகள் வெகு வெகு சொற்பமே. ஆனனப்பட்ட ‘மக்களின் இளவரசி’ டயானாவுக்கு நேர்ந்தகதி ஊருக்கே தெரிந்த ஒன்றுதானே. ராஜ வம்ச ரத்தம் ஓடாத அந்த தேவதையின் வாழ்க்கை கொடுங்காற்றில் சிக்கிய மெழுகுச் சுடராக அல்லவா அணைந்துவிட்டிருக்கிறது.

சாதி அமைப்பில் சகோதரத்துவம் இல்லை.
மதத்துக்குள் சாதியை விட சகோதரத்துவம் கொஞ்சம் போல அதிகம்தான். ஆனால், பிற மதத்தினர் மீது அவை காட்டிய வெறுப்பு, சாதிகளுக்கு இடையே இருந்த வெறுப்பைவிட நூறு மடங்கு அதிகம். அந்தவகையில் சாதி ஒரு சிலந்தி போன்றது. மதம் ஆக்டோபஸ் போன்றது. எனவே, இந்திய சாதி மீதான விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவரின் நேர்மையை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இந்த உலகில் ஏற்படுத்தி இருக்கும் அழிவைக் குறித்து என்ன சொல்கிறார் என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், நாயைப் பார்த்ததும் கல்லெடுத்து எறிபவர், ரத்தம் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டபடி இருக்கும் ஓநாயைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால், அவரை நல் மேய்ப்பனாக ஒருபோதும் மதிக்கமுடியாது. ஓநாயின் கைக்கூலியாகத்தானே அவரைச் சொல்ல முடியும்.

சாதிய அமைப்பில் வேலையானது பிறப்போடு பிணைக்கப்பட்டிருக்கிறது. மதம் பிரதானமாக இருந்த பகுதிகளிலும் இதே நிலைதான் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை இருந்து வந்திருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிது புதிதாக பல்வேறு வேலைகள் முளைக்க ஆரம்பித்தன. உற்பத்தி பெருகியது. புதிய சந்தைகள் தேடிக் கண்டடையப்பட்டன. அனைவருக்கும் கல்வி தருவதற்கான தேவை எழுந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கல்வியைப் பலருக்கும் கற்றுத் தர வழி பிறந்தது. போக்குவரத்து எளிதானதால் உலகின் எந்த மூலைக்கும் போய்வருவது எளிதானது.

இவையெல்லாம் வேலை வாய்ப்புகளை அதிகரித்தன. எனவே, பெற்றோர் பார்த்த வேலையையே குழந்தைகளும் செய்ய வேண்டியிருந்த நிலை மெள்ள மாற ஆரம்பித்தது. இந்தத் தொழில் வளர்ச்சி இந்தியாவுக்கு சிறிது பிந்தியே வந்து சேர்ந்தது. இந்தியாவில் தொழிலும் விஞ்ஞானமும் அதற்கு முன்பே சிறந்த நிலையில்தான் இருந்தன. என்றாலும் தொழில் புரட்சியின் வெற்றி மிகப் பெரிய பாய்ச்சலாக இருந்தது. அதை வைத்து உலக அரங்கில் முன்னிலை பெறத் தொடங்கிய மேற்கத்திய உலகத்தினர் தாங்கள் சென்ற நாடுகளில் இருந்த அமைப்புகள் அனைத்தையும் தங்களுடைய குறுகலான இன, மத வெறி கொண்ட கண்களுடனே பார்த்தனர். குடியேற்ற நாடுகளில் இருந்த சமூக, அரசியல், பொருளாதார, ஆன்மிக அமைப்புகளை இழிவானது என்று முத்திரை குத்தினர். சாதி அமைப்பு அவர்களுக்கான துருப்புச்சீட்டாக ஆனது. ஒருவர் செய்யும் வேலையைப் பிறப்போடு பிணைத்திருக்கும் சாதி அமைப்பை மிகப் பெரிய கொடூரமான அமைப்பாக பிரசாரம் செய்தனர்.

சாதி அமைப்பில் கல்வியானது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிகளுக்கு உள்ளாக மட்டுமே இருந்தது. அதுதான் எல்லா நசிவுகளுக்கும் காரணம் என்று ஒரு வாதம் சொல்லப்படுவதுண்டு. விஷயம் என்னவென்றால், அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு தொழில் புரட்சி ஏற்பட்டு பலருக்கும் கல்வி கற்றுத் தர வாய்ப்பு உருவான பிறகுதான் மத ஆதிக்கம் நிலவிய பகுதிகளிலும் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்தது. அதுவரை கல்வியானது அங்கும் முதல் மூன்று வகுப்பினருக்கு உள்ளேயே இருந்துவந்திருக்கிறது. அதை ஒப்பிடும் போது இந்தியாவில் அனைத்து சாதியினருக்கும் கல்வி தரப்பட்டுத்தான் வந்திருக்கிறது. 

ஆக, சாதி அமைப்பின் குறைகளாகச் சொல்லப்பட்ட அனைத்துமே மத ஆதிக்கம் செலுத்திய பகுதிகளிலும் இருக்கவே செய்திருக்கிறது. அந்தவகையில் அப்போதைய வாழ்க்கை முறையை மனித பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு கட்டமாகவே பார்த்திருக்க வேண்டும். ஆனால், சாதியை விட மதமே உயர்வானது என்ற ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், உலகெங்கும் ரத்த ஆறைப் பெருகெடுத்த ஓட வைத்த மதம் உயர்ந்ததென்று சொல்வதில் சாதி வழியில் வந்தவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.
சாதி மிகப்பெரிய சாதகமான அம்சமென்னவென்றால் அது அதிகாரக் குவிப்புக்கு எதிரானது.

மதம் அதிகாரத்தை பூதாகாரமாகத் தொகுத்து பெரிதாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், மதத்தினால் இந்த உலகுக்கு எந்த அளவுக்கு நன்மை விளைந்திருக்கிறதோ அதை விடத் தீமையே அதிகமாக விளைந்திருக்கிறது. ‘வரையக்கூடாத’ ஒரு கார்ட்டூன் வரையப்பட்டதென்றால் உலகம் முழுவதும் ஒரு ஊழிப் பேரலை கிளம்பி அழிவின் கோர நடனத்தை ஆடியே அடங்கும். சற்று உயரமான இரண்டு கட்டடங்கள் வீழ்த்தப்பட்டால் ஒரு நாடே மயானமாக்கப்படும். ஆனால், சாதி எழுப்பும் வன்முறைக் குமிழ்களின் எல்லை மிகவும் குறுகியது. அது ஒருபோதும் பேரழிவை உருவாக்காது. மதம் சமத்துவம் என்ற போர்வையில் உருவாக்கும் நன்மையைவிட அது ஏற்படுத்தும் அழிவே அதிகம். ‘சமத்துவத்’துக்கு எதிரான சாதி ஏற்படுத்தும் அழிவைவிட அது உருவாக்கும் நன்மைகள் அதிகம்.

Tuesday, December 11, 2012

வீரநாராயண ஏரி

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். 

அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. 


 
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.

இன்று ...........கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, நீரின்றி முற்றிலும் வறண்டதால் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணன் ஏரி என்கிற வீராணம் ஏரி உள்ளது.