Skip to main content

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.



உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.

உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.

அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்றியுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் விழா உழவையும் தொழிலையும் போற்றிப் பேணிப் பின்பற்றிப் பரப்புகின்ற பெருநாளாகும்.




சுறவம் ௧(தை 1) : பொங்கல் விழா, உலகை வாழ்விக்க வந்த உழவர்-உழைப்பாளர் விழா

இவ்வாறு உழவுத் திருநாள், உழவர் திருநாள், உழைப்பாளர் உயர்வு நாள், பொங்கல் பெருநாள், தமிழர் திருநாள், தமிழகத் திருநாள் என்னும் சிறப்புக்குரிய பொங்கல் பெருவிழாவை, தமிழர் திருவிழாவை ஒரு கிழமை (வார) விழாவாக கொண்டாடல் வேண்டும் என்று தமிழகப் புலவர் குழு முடிவு செய்து தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது.

௧௯௩௧-இல் (1931இல்) திருச்சியில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழ்க் கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் கூடி, பொங்கல் விழா தமிழர் விழா - மதச்சார்பற்ற விழா என்பதை நாட்டுக்கு அறிவித்தனர்.

௪௯(49) தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் கொண்ட தமிழகப் புலவர் குழு ௦௯.௦௫.௦௯௭௧ (09.05.1971)ஆம் நாள் திருச்சியில் நடந்த குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு கிழமை விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்ற முடிவு செய்தது.




தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள்
மார்கழி இறுதி நாள் : போகி விழா
சுறவம் ௧ (தை 1) : தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா
சுறவம் ௨ (தை 2) : திருவள்ளுவர் விழா
சுறவம் ௩ (தை 3) : உழவர் விழா
சுறவம் ௪ (தை 4) : இயல் தமிழ் விழா
சுறவம் ௫ (தை 5) : இசைத்தமிழ் விழா
சுறவம் ௬ (தை 6) : நாடகத் தமிழ் விழா


தமிழர் திருநாள் கொண்டாடுவோம் - நாளும் தமிழ் வளர்த்து உலகப் புகழ் சூடுவோம்.

பொங்கல் பெருவிழா, தமிழ் கூறும் நல்லுலகின் தேசியத் திருவிழா. உலகில் ௫௭ (57) நாடுகளில் வாழ்கின்ற ஏழரை கோடி தமிழின மக்கள் சாதி, மதம், நிறம், கட்சி, அரசியல், நாடு வேறுபாடு இல்லாமல் பண்பாட்டு அடிப்படையில் கொண்டாடுகின்ற தமிழர் திருவிழா. எனவே பொங்கல் பெருவிழா தமிழர் திருவிழா என அழைக்கப்படுகின்றது. தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள் தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழ் நிலத்தை என்றும் தாழ்த்தாத, வீழ்த்தாத நாளாக இருப்பதாளது தமிழர்களின் பெரிய விழாவாகவும் பெருமைக்கும் புகழுக்கும் உரிய விழாவாகவும் இருப்பதால் பெருவிழா என்று அழைக்கப்படுகின்றது.

தூய்மை, துப்புரவு, உழவு, உழைப்பு, நன்றியறிதல், மழை,ஞாயிறு போற்றல் ஆகியவற்றின் சீரும் சிறப்பும் உரைக்கும் விழா. போகித் திருநாள், பொங்கல் புத்தாண்டுப் பெருநாள் இரண்டும் தமிழின மக்களின் வீட்டு நலனையும் , திருவள்ளுவர் திருநாள் , உழவர் திருநாள் இரண்டும் தமிழ்நாட்டின் நலனையும் , இயல் தமிழ்த் திருநாள், இசைத் தமிழ்த் திருநாள், நாடகத் தமிழ்த் திருநாள் மூன்றும் முத்தமிழ் நலனையும் போற்றிப் பேணிக் காத்து வருகின்றன. சிந்தனைச் செம்மல் தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப்புக்கு உட்படாதது எதுவுமேயில்லை. ஆனால் அவர் எதிர்ப்புக்கு ஆளாகாது, பாராட்டையும் பெற்றது, பொங்கல் பெருநாள் மட்டுமே. அவர் பாராட்டிப் பரப்பிய ஒரே விழா பொங்கல் பெருவிழா! ஒரே நூல் திருக்குறள்! ஒரே புலவர் திருவள்ளுவர்! தந்தைப் பெரியாரின் பாராட்டு என்பது ஒப்பிலாச் சான்றுதானே.


அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, வள்ளுவத்தை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!






பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம