Skip to main content

கங்கை கொண்ட சோழ ராஜா ராஜேந்திரபுரம்

மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும், ஐம்பது வீடுகளும் கொண்ட "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற சிறிய கிராமத்தின் பெயர் பலகை நம் கண்ணில் தென்படும்.



சோழர்கள் ஆட்சியில் அதிக வருடங்கள் தலைநகராக இருந்த ஊர் அது. அந்த ஊரை தலைநகராய் கொண்டு சுமார் 254 வருடங்கள் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், பல தேசங்களை தனக்கு கீழாக கொண்ட தலைநகர் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை அரண்மனைகள்? எத்தனை தெருக்கள்? எத்தனை அங்காடிகள்? எத்தனை படை வீரர்கள்? எத்தனை யானைகள்? எத்தனை குதிரைகள்? கண்களை மூடிக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் அந்த சோழத் தலைநகரின் நிலையை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், பிரம்மிப்பு!. அகழ்வாய்வு செய்யும் போது அங்கு கிடைத்த கல்வெட்டைக் குறித்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த நகரில் ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், சோழ கேரளாந்தகன் திருவாயில், ராஜ ராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, கூடைஆழ்வன்யன் போன பெருவழி, வேம்புக்குடி வாசல், குலோத்துங்க சோழன் திருமதில், குலோத்துங்க சோழன் பெருவழி போன்ற எண்ணற்ற பெயர்களை தாங்கிய வீதிகளும், வாயில்களும், அரண்மனைகளும் நிறைந்த அற்புதமான தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது இந்த கிராமம்!.

ஒரு சிறிய விஷயத்தை மனதில் நிலை நிறுத்துக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள், நடனமும், நாட்டியமும், இசையும், கணிதமும், மருத்துவமும், விவசாயமும், வணிகமும் உச்சத்தை தொட்டிருந்த நேரம் அது, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அதே சோழர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் இது, ஒரு கோயிலையே இத்தனை பிரம்மாண்டமாய் அமைத்தவர்கள், தாங்கள் புதியதாக குடியேரப்போகும் நகரை எப்படி வடிவமைத்திருப்பார்கள், நகரின் நடுவே கோயில் இருக்க வேண்டும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த பிரம்மாண்ட விமானம் தெரிய வேண்டும், யாருக்கு வீடு எங்கே ஒதுக்க வேண்டும்? தெருக்கள் எப்படி அமைய வேண்டும், போர் வீர்கள் எங்கே இருக்க வேண்டும்? அரண்மனை எந்த திசையில் இருக்க வேண்டும்? திடீரென படை எடுப்பு வந்தால் அதை சமாளிக்க படைகளை அந்த நகரில் எப்படி நிலைநிறுத்தி இருக்க வேண்டும்,யோசிக்க, யோசிக்க ஆவல் அதிகமாகின்றது.

நேஷனல் ஜியோகிராபிக் சானலில் "Mega Cities" நிகழ்ச்சியை காணும் போது ஏற்படும் அதே பிரம்மிப்பு!. அப்படி அமைக்கப்பட்ட அவர்களின் நகரில் திசைக்கு ஒன்றாக நகரின் எல்லையில் காவல் தெய்வங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அந்த தெய்வங்கள் அனைத்தும் சோழர்கள் கங்கை வரை போருக்கு சென்ற போது வழியில் கடந்து சென்ற ஊர்களில் இருந்து எல்லாம் கொண்டுவரப்பட்ட தெய்வங்கள் அனைத்தையும் ஒவ்வொரு திசையிலும் பிரத்திட்டை செய்திருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் சென்று இந்த தெய்வங்களை காணுங்கள், இவை அனைத்தும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெற்றிச் சின்னங்களாக சோழர்களால் அன்றைக்கு கொண்டுவரப்பட்டவை.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கே "சளுப்பை" என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊரில் (அன்று சாளுக்கிய குலநாசினி மண்டலம்) வட எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கே வானதாராயண் குப்பத்தில்; வீர ரெட்டித் தெருவில், தென் திசை எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே செங்கல் மேடு என்ற இடத்தில் கிழக்கு திசை எல்லை தெய்வமாக கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

பாலகுமாரன் அய்யாவோடு, திரு.கோமகன் தயவில் நான் அந்த சோழத் தலை நகரை வீதி வீதியாக சுற்றி வந்து வியந்திருக்கிறேன், இந்த வெற்றிச் சின்னங்களை தொட்டுத் தடவி பரவசமடைந்திருக்கிறேன், ஆங்காங்கே காணப்படும் இடிந்த சுவர்களும், அரண்மனை மண் மேடுகளும், இந்த வெற்றிச் சிலைகளையும் காணும் போது, அந்த அற்புதமான நாகரிகத்தின் அழிவைக் கண்டு கலங்காமல் இருக்க முடியவில்லை, இன்றைக்கு புற்கள் நிறைந்திருக்கும் அந்த கிராமம், அன்று புலிகள் நிறைந்த பெரிய நகரம்! அந்த நகருக்கு சொந்தக்காரன் ராஜேந்திரன்! அவன் தான் அந்த புலிகளுக்குத் தலைவன்!.

வாழ்க தமிழ்பெருங்குடி மக்கள்! வளர்க "கங்கை கொண்டார்" இராசேந்திர பெருவேந்தர் புகழ்!!

Comments

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம